Skip to content
BREAKING
ADVERTISEMENT

"5 நிமிஷம் பேசுனதுக்கு கொளத்தூர்ல காலி என்றீர்களே.. கரூரில் பாட்டு பாடியும் ஏன் தோற்றீர்கள்?"

முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி!

"5 நிமிஷம் பேசுனதுக்கு கொளத்தூர்ல காலி என்றீர்களே.. கரூரில் பாட்டு பாடியும் ஏன் தோற்றீர்கள்?"

மதுராந்தகம்: "கொளத்தூரில் நான் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ததை வைத்து ஸ்டாலின் காலியாகிவிட்டார் என்று ஏளனம் பேசினீர்கள்; அப்படியானால் கரூரில் மணிக்கணக்காக நின்று பாட்டு பாடியும், விழுப்புரத்தில் பிரம்மாண்ட மாநாடு நடத்தியும் தவெக ஏன் ஜெயிக்கவில்லை?" என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தையும் முதல்வர் விஜய்யையும் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

"விஜய் மணிக்கணக்கில் பேசிய இடங்களிலெல்லாம் தவெக படுதோல்வி!"

பிரச்சார மேடையில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:

"கொளத்தூரில் நான் 5 நிமிடம் பேசியதற்கே ஸ்டாலின் தோற்றுவிட்டதாக நக்கல் பேசுகிறீர்கள். நான் கேட்கிறேன், கரூருக்குப் போய் பாட்டெல்லாம் பாடினீர்களே, அங்கு ஏன் நீங்கள் வெற்றி பெறவில்லை? விழுப்புரத்தில் அவ்வளவு பெரிய மாநாடு போட்டீர்களே, அங்கு ஏன் தோற்றீர்கள்? கன்னியாகுமரிக்குச் சென்றீர்களே, அங்கு ஒரு தொகுதியையாவது கைப்பற்ற முடிந்ததா? திருவாரூருக்குப் போய் அடுக்கடுக்காகப் பொய்களை அவிழ்த்துவிட்டீர்களே, அங்கு என்ன ஆனது? உண்மை என்னவென்றால், விஜய் மணிக்கணக்கில் நின்று பிரச்சாரம் செய்த அத்தனை தொகுதிகளிலும் தவெக படுதோல்வியைத்தான் சந்தித்தது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகமும் அந்தப் பட்டியலில் சேர வேண்டும்!"

"திமுக என்று புலம்புவதை நிறுத்துங்கள்!"

அரசு நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து விமர்சித்த ஸ்டாலின், "மக்கள் அடிப்படைப் பிரச்சனைகளை எழுப்பும்போது ஒரு முதல்வராக அதற்குப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து எல்லா மேடைகளிலும் 'திமுக... திமுக...' என்று புலம்பிக்கொண்டிருந்தால் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது. அதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களை எந்த அளவுக்கு அலட்சியமாக நினைக்கிறீர்களோ, அந்த ஆணவமே உங்களை வீழ்த்தும்" எனக் கடுமையாக எச்சரித்தார்.

ADVERTISEMENT

மேலும் அவர் பேசுகையில், "மதுராந்தகம் மக்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்கு நீங்கள் போடும் வாக்கு என்பது அராஜகம், ஆணவம், முறைகேடு மற்றும் பணநாயகத்திற்குத் துணைபோகும் வாக்கு. வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழையக் கூடாது. கொள்கை உறுதியோடு உங்களுடனே களத்தில் நிற்கும் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு வாக்களியுங்கள்" என்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இடைத்தேர்தல் களத்தில் முதல்வர்: தோல்வி பயமா?

வழக்கமாக இடைத்தேர்தல்களில் முதலமைச்சர்கள் நேரடியாகக் களமிறங்கி வீடு வீடாகப் பிரச்சாரம் செய்வதில்லை; ஆளும் கட்சியின் பலத்தையே அமைச்சர்களும் நிர்வாகிகளும் பயன்படுத்துவதுதான் அரசியல் வழக்கம்.

ஆனால், மதுராந்தகத்தில் தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் நேரடியாகக் களம் இறங்கிப் பிரச்சாரம் செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல்வரே நேரடியாகக் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், ஆளும் தரப்புக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதா என எதிர்க்கட்சியினர் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், மதுராந்தகத் தேர்தல் களம் உச்சக்கட்ட அனலை எட்டியுள்ளது.

ShareXFacebook

Reader Comments

Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.

Web Stories

More stories ›