"அமைச்சர் பதவி சுகத்திற்காக சமுதாய உரிமைகள் அடகு?" – தவெக அரசின் கைப்பாவையாக இயங்கும் அமைச்சர் ஷாஜகான்
தவெக அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ஐயுஎம்எல் மீது வெடிக்கும் கடும் அதிருப்தி!

சென்னை:
ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்து வரும் சமீபத்திய முடிவுகள் சிறுபான்மையின மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வரும் சூழலில், கூட்டணியில் அங்கம் வகித்து அமைச்சர் பதவியை அனுபவித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) நிர்வாகத்தின் மீது கடுமையான அரசியல் விமர்சனங்களும் கண்டனக் கணைகளும் பாய்ந்து வருகின்றன.
"தலைமைக்கே தெரியாமல் ரகசியமாகத் தவெக கூட்டணியில் கையெழுத்துப் போட்டு அமைச்சர் பதவியைப் பெற்ற உத்தமரே... நீங்கள் அமைச்சரானதால் இந்த சமுதாயத்திற்கு என்ன பயன்?" என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்களும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களிலும் அரசியல் தளத்திலும் புயலைக் கிளப்பியுள்ளன.
சமுதாய உரிமைகள் புறக்கணிப்பு:
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
தவெக அரசில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படுவதாகக் களத்தில் முன்வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டுகள்:
சுற்றுலாத்துறை சார்பில் ‘ராம் யாத்ரா’ முன்னெடுப்பு:

மதச்சார்பற்ற அரசு என்ற கொள்கைக்கு மாறாக, ராமேஸ்வரத்தில் தவெக அரசின் சுற்றுலாத்துறை சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக 'ராம் யாத்ரா' திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது சிறுபான்மையினர் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீண்டகால இஸ்லாமிய சிறைவாசிகளுக்குத் தொடரும் பரோல் மறுப்பு:

பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது பரோல் வழங்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகள் ஆளும் தவெக அரசால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தர்கா விவகாரமும் ஆவணப்படத் தடையும்:

வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாஷா தர்காவிற்குச் செல்லும் வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தர்காவின் வரலாற்றுப் பின்னணியை விளக்கும் ஆவணப்படத்திற்கும் அரசு நிர்வாகம் தடைக் கொடி காட்டியுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீதான அலட்சியம்:

ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் சொத்துக்களை மீட்பதிலோ அல்லது சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலோ அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் வலுக்கின்றன.
இடஒதுக்கீட்டு உரிமைகளில் நிலவும் மௌனம்:

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு கொள்கை முடிவையும் தவெக அரசு முன்னெடுக்காமல் தவிர்த்து வருகிறது.
"பதவிக்கு ஆபத்து வராவிட்டால் போதும்!" – ஐயுஎம்எல் மீது பாயும் விமர்சனம்

"எத்தனை உரிமைகள் பறிபோனாலும், சிறைவாசிகள் வஞ்சிக்கப்பட்டாலும், தர்கா வழிபாட்டு உரிமைகளுக்கு தடை வந்தாலும் பரவாயில்லை... இதனால் அமைச்சரின் பதவிக்கோ அல்லது கட்சிக்குக் கிடைத்த அதிகார சுகத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லையே..." என்ற கடுமையான நையாண்டி மற்றும் ஆவேசக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
சமுதாயத்தின் குரலாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள், தங்களின் சுயநலத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மௌன சாட்சியாக மாறிவிட்டதாக அரசியல் பார்வையாளர்களும் பொதுமக்களும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இடைத்தேர்தல் களத்திலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஆளும் கூட்டணிக்குள் சலசலப்பு அதிகரித்துள்ளது.






Reader Comments
Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.