ஆம்பூர் அருகே தாயில்லாத மாணவனை பிடித்து சென்று விடுவிக்க ரூ.10,000 லஞ்சம்: உமராபாத் சிறப்பு உதவி ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்!
ஆம்பூர் அருகே பரபரப்பு

ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பொதுவழித் தகராறு வழக்கில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவனை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவழிப் பாதை தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் பொதுவழிப் பாதை தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை ஆகியோரது குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக இடத் தகராறு நிலவி வந்தது. இந்த விவகாரம் சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே தகராறாக வெடித்து கைகலப்பானது.
மாணவனிடம் விசாரணை & லஞ்சக் கோரிக்கை
இதுகுறித்து இரு தரப்பினரும் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் விசாரணை நடத்தச் சென்றபோது மணிமேகலை வீட்டில் இல்லாததால், அவரது மகனான பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவனை உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவில், அந்த மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சமாகத் தர வேண்டும் என மதியழகன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

எஸ்பி அதிரடி உத்தரவு
காவல்துறையினரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அக்ஷய் அணில் வாக்ரேவிடம் நேரில் புகார் அளித்தனர்.
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எஸ்.எஸ்.ஐ மதியழகன் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதையடுத்து அவரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட மாவட்ட எஸ்பி, தொடர்ந்து நடைபெற்ற விரிவான விசாரணைக்குப் பின் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.








Reader Comments
Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.