2021-ல் திமுக அமோக வெற்றி பெற்ற தொகுதிகளில் மட்டும் சராசரியாக 30,000 வாக்குகள் நீக்கம்
பிசினஸ் லைன் ஆய்வில் அடுத்த பகீர் தகவல்!

சென்னை:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்ட 'சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த' (SIR - Special Intensive Revision) நடவடிக்கையின் புள்ளிவிவரங்கள் நாளுக்கு நாள் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தவெக வெற்றி பெற்றுள்ளதாக வெளியான முந்தைய தகவலைத் தொடர்ந்து, "2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளைக் குறிவைத்து சராசரியாக 30,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப்பட்டுள்ளனர்" என்ற திடுக்கிடும் தரவுப் பின்னணியை 'தி இந்து பிசினஸ் லைன்' நாளிதழின் ஆய்வுக் கட்டுரை விரிவாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
பிசினஸ் லைன் ஆய்வில் அம்பலமான முக்கிய உண்மைகள்
திமுகவின் பலமான கோட்டைகளில் கைவரிசை: 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்ற முக்கியத் தொகுதிகளில், இந்த முறை சராசரியாக 30,000 முதல் 50,000 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

வெற்றி-தோல்வியை மாற்றியமைத்த மர்மம்: 2021-ல் திமுகவுக்குக் கணிசமான வாக்கு வங்கியாக இருந்த நகர்ப்புற, தொழிலாள வர்க்க மற்றும் சிறுபான்மையினர் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான பெயர்கள் 'இடப்பெயர்வு', 'முகவரி மாற்றம்' என்ற பெயரில் நீக்கப்பட்டுள்ளன.
ஆளும் தவெக அறுவடை: இந்தத் தொகுதிகளில் கொத்தாக வாக்குகள் சரிந்ததால், அங்கு தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றிக்கான களமாக மாறியுள்ளது.
தேர்தல் ஆணையம் மீது பாயும் கடுமையான குற்றச்சாட்டுகள்
முன்னதாக 80,000-க்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெகவே 100% வெற்றி பெற்றதும், 30,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்ட 69 தொகுதிகளில் 52 தொகுதிகளை தவெக அள்ளியதும் ஆய்வில் தெரியவந்தது.

தற்போது திமுகவின் பாரம்பரிய பலம் வாய்ந்த தொகுதிகளிலேயே இந்த 30,000+ வாக்காளர் நீக்கம் சராசரியாக நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், "இது தேர்தல் ஆணையத்தின் முறையான சரிபார்ப்புப் பணி அல்ல; மாறாக எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியைத் திட்டமிட்டுக் குறிவைத்து அழிக்க நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலை" என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றன.








Reader Comments
Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.